போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை


போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 24 Feb 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக- கேரள அதிகாரிகள் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

கம்பம்,

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இந்த மலைப்பாதைகள் வழியாக மர்மநபர்கள் போலி மதுபானம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி செல்கின்றனர். போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் 3 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு 24 மணி நேரமும் போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர சோதனைக்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் மர்மநபர்கள் நூதன முறையில் போதைப்பொருட்களை கடத்தி செல்கின்றனர்.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கம்பம் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தேனி கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளிராஜா தலைமை தாங்கினார். இடுக்கி மாவட்ட கலால்துறை இணை கமிஷனர் பிரதீப், தேனி கலால் துறை உதவி கமிஷனர் ராஜா, உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி உள்பட இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு, மந்திப்பாறை, மூங்கில்பள்ளம், குமுளி, போடிமெட்டு போன்ற வனப்பகுதிகள் வழியாகவே மர்மநபர்கள் போதைப்பொருட்களை கடத்தி செல்கின்றனர். இதையடுத்து அங்கு இரு மாநில அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு இரு மாநிலங்களில் பதுங்கி இருப்பவர்களை பிடித்து அந்தந்த போலீசாரிடம் ஒப்படைப்பது, வனப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரியும் நபர் களை பிடித்து விசாரணை நடத்துவது, சோதனைச்சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

Next Story