தொழிலாளி கொலை வழக்கில் சிக்கிய 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திண்டுக்கல்லில் தொழிலாளி கொலை வழக்கில் சிக்கிய 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 48). சுமைதூக்கும் தொழிலாளி. கடந்த மாதம் 3-ந்தேதி காலை அருள்சாமி, தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓட,ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.
திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவம் குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் 9 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த அன்பழகன் (23), ரெங்கமூர்த்தி (30), ஸ்ரீரெங்கன் (23), பாரதிபுரம் ராஜேஷ் (24), சுதாகர் (30), சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த சக்திவேல் (23) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார்.
இவர்களில் ரெங்கமூர்த்தி, ஸ்ரீரெங்கன் ஆகியோர் பொன்மாந்துறையை சேர்ந்த ரவுடி பாஸ்கர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 6 பேரையும் போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story