திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குரங்குகள் அட்டகாசம் - கூண்டு வைத்து பிடிக்க பக்தர்கள் கோரிக்கை


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குரங்குகள் அட்டகாசம் - கூண்டு வைத்து பிடிக்க பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2019 10:39 PM GMT (Updated: 24 Feb 2019 10:39 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தமிழகத்தில் உள்ள ஆன்மிக ஸ்தலங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். விழா நாட்களிலும், பவுர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

மேலும் தீபத்திருவிழா உள்பட முக்கிய திருவிழா நாட்களில் திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

தற்போது இக்கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை குரங்குகள் அச்சுறுத்தி வருகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன.

மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் பார்சல்களை குரங்கள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது. சமீப நாட்களாக கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது பக்தர்கள் சிலர் பூஜை பொருட்களை ஒரு பையில் வைத்து கொண்டு வந்தனர். அவர்களை நோட்டமிட்ட குரங்குகள் திடீரென பூஜை பொருட்களை பறித்துச் சென்றது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘குரங்குகள் அனைத்தும் திருவண்ணாமலை தீப மலையில் தான் சுற்றித் திரிந்தன. அவைகளுக்கு குடிக்க தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லாததால் நகரை நோக்கி படையெடுக்கின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் உணவு வழங்குவதால் கோவிலை விட்டு குரங்குகள் செல்ல மறுக்கின்றன. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் குரங்குகளுக்கு உணவுகளை வழங்கக்கூடாது. நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனத்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை வலம் வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காட்டில் விட வேண்டும்’ என்றனர்.


Next Story