திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தையல்தொழிலாளி கைது
திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தையல்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் பனியன் நிறுவனங்களில் இருந்து துணி பெற்று தைத்துக்கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9 வயது உடைய 4–ம் வகுப்பு மாணவி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.
இதை கவனித்த செந்தில்குமார் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தனது வீட்டுக்குள் அழைத்துச்சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சிறுமி அங்கிருந்து வெளியே வந்துள்ளாள். இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு சிறுமியின் பெற்றோர் இரவு வீடு திரும்பியுள்ளனர். சிறுமியும் தூங்கினாள். அதன்பிறகு அதிகாலையில் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சந்திரமோகன், சப்–இன்ஸ்பெக்டர் கலாவதி, ஏட்டு வனஜா மற்றும் போலீசார், செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.