நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாத நிலை பொறுப்பில் இருந்தவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாத நிலை பொறுப்பில் இருந்தவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:51 AM IST (Updated: 25 Feb 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாத நிலையில் இப்பொறுப்பில் இருந்தவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தில் போலீஸ் தனிப்பிரிவின் பணி முக்கியமானதாகும். அதிலும் தேர்தல் நேரத்தில் இப்பிரிவின் பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாவண்ணம் தவிர்த்தல், தேர்தல் பாதுக்காப்பு திட்டங்களை வகுத்தல், பிரசாரத்திற்கு வரும் அரசியல் கட்சி தலைவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை கண்காணித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

மேலும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கண்காணிப்பில் தான் ஒட்டுமொத்த தனிப்பிரிவும் இயங்குவதோடு தேர்தலுக்காக நியமிக்கப்படும் சிறப்பு போலீஸ் பிரிவும், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில்தான் பணியாற்ற வேண்டும்.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜான்பிரிட்டோ உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறி சென்ற பின்பு மிக முக்கியமான இந்த பணியிடத்தில் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்காலிக ஏற்பாடாக விருதுநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் சரவணன் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பினை கவனித்து வந்தார்.

தற்போது தேர்தலுக்காக தேர்தல் கமி‌ஷன் உத்தரவுப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட போதும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இப்பொறுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் சரவணனும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமும் தெரியவில்லை.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டிய நிலையில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கு இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட வேண்டியது அவசியமும், அத்தியாவசியமும் ஆகும். பொதுவில் விதிமுறைப்படியும், மரபுப்படியும் தனிப்பிரிவு நியமனத்திற்கு அதற்கான பயிற்சி பெற்றவர்களே நியமிக்கபட வேண்டும். அப்போதுதான் தனிப்பிரிவின் பணிகள் முறையாக கண்காணிக்கப்பட வாய்ப்பு ஏற்படும். ஆனால் சமீபகாலமாக தனிப்பிரிவு நியமனத்திற்கு இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாமல் விலக்கு அளிக்கும் நிலையே இருந்து வருகிறது.

எனவே தென்மண்டல போலீஸ் நிர்வாகம் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே விருதுநகர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவிற்கு தகுதியுள்ள நபரை தேர்வு செய்து நியமிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதில் தாமதமாகும் பட்சத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தாமதமும், பாதிப்பும் ஏற்படும்.


Next Story