மாட்டு வண்டிகளை ஒப்படைத்து காத்திருக்கும் போராட்டம் சி.ஐ.டி.யு. முடிவு


மாட்டு வண்டிகளை ஒப்படைத்து காத்திருக்கும் போராட்டம் சி.ஐ.டி.யு. முடிவு
x
தினத்தந்தி 25 Feb 2019 5:14 AM IST (Updated: 25 Feb 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ள அனுமதிக்காததை கண்டித்து மாட்டு வண்டிகளை ஒப்படைத்து காத்திருக்கும் போராட்டம் நடத்த சி.ஐ.டி.யு. முடிவு செய்துள்ளது.

பாகூர்,

புதுவை பிரதேச மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பாகூரில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க துணைத்தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தலைவர் சீனுவாசன், செயலாளர் சிவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*கடந்த 2 வருட காலமாக புதுச்சேரியில் மணல் தடை செய்யப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணல் ஏற்றி வியாபாரம் செய்துவந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வேலையில்லாமல் வாழவழியின்றி தவித்து வருகின்றனர். எங்கள் சங்கம் சார்பில் புதுவை அரசு கட்டுமான திட்டங்களுக்கு மாட்டுவண்டிகள் மூலம் மணல் வினியோகம் செய்யவேண்டும் என்று ஓராண்டு காலமாக போராடி வந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக முதல்–அமைச்சரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குடிசைமாற்று வாரியத்தில் கல்வீடுகட்டுவதற்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கழிப்பறை கட்டுவது போன்ற அரசு திட்டங்களுக்கு மாட்டு வண்டிகளில் சட்ட ரீதியாக மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

*ஆனால் ஒரு சில உயர் அதிகாரிகள் கோப்புகளை தாமதப்படுத்தி வருகின்றனர். இது மாட்டுவண்டி தொழிலாளர்களையும், அவர்களது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி அலட்சியப்படுத்துவதாக தெரிகிறது.

*இதை கண்டித்தும், உடனடியாக மாட்டுவண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்கக்கோரியும் இன்று (திங்கட்கிழமை) காலை பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாட்டுவண்டிகள் மற்றும் மாடுகளை ஒப்படைத்து குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story