பவானி அருகே கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது வாய்க்காலில் குதித்து தப்பியவருக்கு வலைவீச்சு
பவானி அருகே கஞ்சா பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வாய்க்காலில் குதித்து தப்பியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி,
பவானி புதிய பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வை.கார்த்தி மற்றும் போலீசார் மோட்டார்சைக்கிளில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமிநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் தப்புவதற்காக ஒரு நபர் அருகே உள்ள காவிரி ஆற்றிலும், மற்றொருவர் காலிங்கராயன் வாய்க்காலிலும் குதித்தனர். உடனே போலீசார், தண்ணீரில் நீந்தி சென்று 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் வாய்க்காலில் வேகமாக நீந்தி தப்பித்துவிட்டார்.
பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (வயது 35) என்பதும், தப்பி ஓடியவர் செந்தில் என்கிற அரைப்பள்ளன் என்பதும், 2 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்ததும், அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழ் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய அரைப்பள்ளனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.