மணல் தட்டுப்பாட்டை கண்டித்து கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது


மணல் தட்டுப்பாட்டை கண்டித்து கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் மணல் தட்டுப்பாட்டை கண்டித்து கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி,

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் மணல் தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜெகவீரபாண்டியன், விவசாய சங்க தலைவர் இமயவரம்பன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி தாலுகா பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசு விதிமுறைகளின் படி மணல் குவாரிகளை திறக்க வேண்டும். மணல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்க வேண்டும். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு மணல் கடத்துவதை அரசு தடுக்க வேண்டும். தட்டுப்பாடின்றி தரமான எம்சேண்ட் மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்டுமான தொழிலாளர்கள் சங்க சீர்காழி நகர தலைவர் முத்துக்குமரசாமி, செயலாளர் ஜெயபால், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உள்பட கட்டுமான தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story