கோடைகாலத்தில் தண்ணீர் இன்றி கருகும் கரும்பு, வாழையை காப்பாற்ற மாற்று நடவடிக்கை கலெக்டரிடம் மனு


கோடைகாலத்தில் தண்ணீர் இன்றி கருகும் கரும்பு, வாழையை காப்பாற்ற மாற்று நடவடிக்கை கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 26 Feb 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

கோடைகாலத்தில் தண்ணீர் இன்றி கருகும் கரும்பு, வாழையை காப்பாற்ற மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

காவிரியில் காட்டுப்புத்தூர் அருகே ஸ்ரீராமசமுத்திரம் என்ற இடத்தில் இருந்து பிரியும் வடகரை வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. பெரும்பாலும் கரும்பு, வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதால் கோடை காலத்தில் கரும்பு, வாழை பயிர்களை கருகிவிடாமல் காப்பாற்ற மாற்று நடவடிக்கையாக குறம்பு (மணலால் அணை அமைத்து ஊற்று தண்ணீரை தேக்கும் முறை) அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மதலை முத்து வீரச்சக்கரா நினைவு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜான் மதலை என்பவர் கொடுத்த மனுவில் 1965-ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போரில் மேற்கு வங்க மாநிலம் கலாய் குண்டா விமான தளத்தை தனது உயிரையும் பொருட்படுத்தாது பாதுகாத்தவர் மதலை முத்து. இந்த வீர தீர செயலுக்காக வீரச்சக்கரம் விருது பெற்ற லால்குடியை சேர்ந்த தமிழரான இவருக்கு பஞ்சாப் மாநிலம் பதன்கோட், ஒடிசா மாநிலம் கோபால் பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் பளிங்கு சிலை, அவரது பெயரில் பயிற்சி மையம் ஆகியவை உள்ளன.அவரது சொந்த ஊரான லால்குடியில் போர் வீரர் நினைவு சின்னம் அமைக்க கடந்த 2014-ம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறோம். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

முத்தரச நல்லூர் அருகில் உள்ள முருங்க பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் தங்க துரை தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோவில் நிர்வாக பொறுப்பை ஒரு சிலர் மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். தற்சமயம் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திருவிழா நடத்தினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த பின்னர் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் குத்தகை உரிமம் முடிந்த பிறகும் அனைத்து கல் குவாரிகளும் மூடப்படாமல் செயல்பட்டு வருகின்றன. பாப்பாப்பட்டி என்ற ஊரில் 2 கிலோ மீட்டர் சுற்றளவும், 300 அடி உயரமும் கொண்ட மலையை காணவில்லை என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சாமானிய மக்கள் நலக்கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் மனு கொடுத்தார்.

தமிழ்நாடு சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிற்சங்கத்தினர் அதன் மாநில தலைவர் கணேஷ் தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் உரிமம் பெற்றுள்ள ஏஜென்சிகள் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது இல்லை, மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, வருங்கால வைப்பு நிதி போன்ற அரசு சொல்லும் எந்த ஒரு சலுகைகளையும் வழங்குவது இல்லை. இது சம்பந்தமாக தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

திருச்சி தென்னூர் அண்ணாநகரில் இயங்கி வந்த தனியார் தொழிற்பயிற்சி மையத்தின் பூட்டை உடைத்து மாணவிகள் சான்றிதழ் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி அதன் தாளாளர் மனு கொடுத்தார். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் திடீர் என மாயமாகி உள்ள இயற்கை ஆர்வலர் முகிலனை கண்டு பிடித்து தர வேண்டும் என கோரி கோஷம் எழுப்பிய படி வந்து மனு கொடுத்தனர். 

Next Story