மாதவரம் அருகே தகராறை தட்டிக்கேட்ட லாரி டிரைவருக்கு வெட்டு; 3 பேர் கைது


மாதவரம் அருகே தகராறை தட்டிக்கேட்ட லாரி டிரைவருக்கு வெட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் அருகே தகராறை தட்டிக்கேட்ட லாரி டிரைவரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம், 

சென்னையை அடுத்த மாதவரம் சி.எம்.டி.ஏ. பகுதியில் லாரி டிரைவர் மணி என்பவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்த குமார் சிங் (வயது 35) என்பவர் லாரியை சத்தமாக இயக்கினார்.

அதற்கு மணி, “நான் செல்போனில் பேசும்போது லாரியை ஏன் சத்தமாக இயக்குகிறாய்?” என கண்டித்தார். இதனால் குமார் சிங்கிற்கும், மணிக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அப்போது மணிக்கு ஆதரவாக அங்கிருந்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பழக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணியரசு(40) என்ற மற்றொரு லாரி டிரைவர் இதுபற்றி குமார் சிங்கிடம் தட்டிக்கேட்டார்.

உடனே குமார் சிங், அவரது நண்பர்களான இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் கிரண்குமார்(35), அஸ்வின்குமார்(23) ஆகியோருடன் சேர்ந்து மணியரசுவை கத்தியால் தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மணியரசை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார் குமார்சிங், அஸ்வின்குமார், கிரண்குமார்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story