நகைக்கடை அதிபரிடம் துப்பாக்கி முனையில் ரூ.20 லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை


நகைக்கடை அதிபரிடம் துப்பாக்கி முனையில் ரூ.20 லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Feb 2019 11:30 PM GMT (Updated: 25 Feb 2019 10:27 PM GMT)

காஞ்சீபுரம் அருகே நகைக்கடை அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.20 லட்சம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் தங்க நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் காஞ்சீபுரம் அருகே அடகு வைத்து மீட்கப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருப்பதாகவும், அதனை மலிவு விலையில் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய மணிகண்டன் கிருஷ்ணகிரியில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்துக் கொண்டு சிவக்குமார் மற்றும் ரியாஸ் முகமது ஆகியோருடன் உடன் காஞ்சீபுரம் வந்துள்ளார்.

காஞ்சீபுரத்தில் சரவணவேல் என்கிற சிங்காரவேல் என்பவரும் அவர்களுடன் வந்து இணைந்துள்ளார். அவர்களிடம் நகை குறித்து மணிகண்டன் கேட்டபோது கோவில்களை சுற்றிப்பார்த்துவிட்டு பிறகு கொடுக்கிறோம் என்று கூறி காஞ்சீபுரத்தில் சுற்றி அலைக்கழித்துள்ளனர்.

பிறகு மாலை பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் நகைகள் இருப்பதாக சொல்லி அழைத்துச் சென்று கீழம்பி பைபாஸ் சாலை அருகே மணிகண்டனிடம் இருந்த ரூ.20 லட்சத்தை பறிக்க அவர்கள் 3 பேரும் முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் சுதாரித்த மணிகண்டன் கார் கண்ணாடியை உடைத்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை மிரட்டி ரூ.20 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து மணிகண்டன் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சரவணவேல் என்கிற சிங்காரவேல் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் உண்மையில் பணம் பறிக்கப்பட்டதா? அல்லது மணிகண்டன் பணத்தை பறிகொடுத்ததுபோல் நாடகமாடுகிறாரா? என்றும் விசாரணை நடத்தி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story