போலி ஆவணங்கள் மூலம் சென்னையில், ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு மத்திய அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக மத்திய அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் தேவன்பு (வயது 58). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேலையூரில் எனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அந்தநிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்து கொண்டனர். அந்த நிலத்தை தற்போது விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் மல்லிகா, உதவி கமிஷனர் ஜெயசிங் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக சேலையூர் பகுதியைச் சேர்ந்த திருமலை, அருள்நாதன், துரை ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
வயது மூப்பு கருதி துரையை போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். திருமலையும், அருள்நாதனும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் திருமலை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அருள்நாதன் சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் தோல் தொழில் சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
Related Tags :
Next Story