செங்குன்றம் அருகே அலுமினிய உருக்கு கம்பெனியில் பொதுமக்கள் முற்றுகை தற்காலிகமாக மூட தாசில்தார் உத்தரவு


செங்குன்றம் அருகே அலுமினிய உருக்கு கம்பெனியில் பொதுமக்கள் முற்றுகை தற்காலிகமாக மூட தாசில்தார் உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2019 3:00 AM IST (Updated: 26 Feb 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே, சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறி அலுமினிய உருக்கு கம்பெனியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த கம்பெனியை தற்காலிகமாக மூட தாசில்தார் உத்தரவிட்டார்.

செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பரத் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான அலுமினிய உருக்கு கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு பழைய அலுமினிய பொருட்களை வாங்கி வந்து, எந்திரங்கள் மூலம் உருக்கி புதிய அலுமினியம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கம்பெனியில் அலுமினியம் உருக்கும்போது சுற்றுச்சூழல் மாசு படுவதாகவும், இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த கம்பெனியை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெரியார் நகர், ஜோதி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று அலுமினிய உருக்கு கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பொன்னேரி தாசில்தார் புகழேந்தி, சோழவரம் வருவாய் ஆய்வாளர் சிவகுமார், கிராம நிர்வாக அதிகாரி ராமலட்சுமி, செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து தாசில்தார் புகழேந்தி, அந்த கம்பெனி உரிமையாளரிடம் உடனடியாக கம்பெனியை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். அதை ஏற்று அந்த கம்பெனி மூடப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story