பந்திப்பூர் வனப்பகுதியில் 3-வது நாளாக எரியும் காட்டுத்தீ - 10 ஆயிரம் ஏக்கர் காடு எரிந்து நாசம்


பந்திப்பூர் வனப்பகுதியில் 3-வது நாளாக எரியும் காட்டுத்தீ - 10 ஆயிரம் ஏக்கர் காடு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 26 Feb 2019 5:09 AM IST (Updated: 26 Feb 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

பந்திப்பூர் வனப்பகுதியில் 3-வது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த தீயினால் 10 ஆயிரம் ஏக்கர் காடு எரிந்து நாசமானது. அங்கு தீயை அணைக்கும் பணியில் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனச்சரணாலயம்.

இந்த வனச்சரணாலயம் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் வனப்பகுதியில் மரங்களும், செடி-கொடிகளும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த தீ மளமளவென அடுத்த வனப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடி-கொடிகள் என அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன. பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் பற்றி எரிந்த இந்த காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுபற்றி அறிந்த வனத் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் வனப்பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருகிறது. வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

ஓரளவுக்கு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் தீ வைத்ததாக ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனச்சரணாலயத்தில் தற்போது எரிந்து வரும் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 600 பேர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்படும்.

இதுவரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி காட்டுத்தீயினால் கருகி நாசமாகி உள்ளது. அங்கிருந்த மரங்கள், செடி-கொடிகள், வனவிலங்குகள் தீயில் கருகிவிட்டன. ஓரளவுக்கு காட்டுயானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிட்டன. இருப்பினும் காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்புதான் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்.

மேலும் தற்போது காட்டுத்தீயினால் பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்டு வந்த சபாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி வரை சபாரி ரத்து செய்யப்படுகிறது. அதனால் சுற்றுலா பயணிகள் யாரும் பந்திப்பூர் வனப்பகுதிக்கு வரவேண்டாம்.

வனப்பகுதியில் தீ வைத்ததாக தற்போது ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்த சதி வேலையில் அவர் மட்டுமே ஈடுபட்டாரா?, அல்லது இதில் அவருடைய கூட்டாளிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதுபற்றி முழுமையான தகவலை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வனத்துறை மந்திரி சதீஷ் ஜார்கிகோளி, கர்நாடக மாநில வனத்துறை முதன்மை செயல் அதிகாரி புணட்டி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பந்திப்பூர் வனப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் வனப்பகுதியில் தீயை அணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மந்திரி சதீஷ் ஜார்கிகோளி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை உடனடியாக அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் தொடர்ந்து 3-வது நாளாக பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருவது பற்றி அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று மதிய வேளையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்காக பெங்களூருவில் இருந்து பந்திப்பூருக்கு 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்தன. அந்த ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் காட்டுயானைகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் கருகி செத்துவிட்டன. தீ அணைந்த இடங்களில் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தீயில் கருகி செத்த மிருகங்களின் உடல் கரிக்கட்டையாக மீட்கப்பட்டன. அவைகளை அதேப்பகுதிகளில் வனத்துறையினர் குழிதோண்டி புதைத்தனர்.

நாகரஒலே

இதேபோல், மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட நாகரஒலே வனப்பகுதியிலும் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. அங்கும் தொடர்ந்து 3-வது நாளாக தீ பரவி வருகிறது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஏராளமான செடி-கொடிகள், மரங்கள் தீயில் கருகிவிட்டன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி கருகி உள்ளது.

குறிப்பாக நாகரஒலே வனப்பகுதிக்கு உட்பட்ட தரிகெகெட்டா பகுதியில் காட்டுத்தீ தற்போது கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. அங்கும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

சிவமொக்கா

இதுமட்டுமல்லாமல், மைசூரு சாமுண்டி மலையிலும் காட்டுத்தீ பரவி உள்ளது. அங்கும் தீ வேகமாக பரவி வருவதால் தீயை அணைக்கும் பணியில், வனத்துறையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியான குச்சலு வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான செடி-கொடிகள், மரங்கள் தீயில் கருகி நாசாகி வருகின்றன. அங்கு தீயை அணைக்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story