வல்லக்கடவு பாலத்தை சீரமைக்காத புலிகள் காப்பக அதிகாரிகள் மீது புகார்


வல்லக்கடவு பாலத்தை சீரமைக்காத புலிகள் காப்பக அதிகாரிகள் மீது புகார்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 26 Feb 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வல்லக்கடவு பாலத்தை சீரமைக்காதது குறித்து மூவர் குழுவிடம் புகார் செய்வது என்று ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தேனி,

தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.

கடைசியாக துணை கண்காணிப்பு குழுவினர் கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி அணையில் ஆய்வு செய்தனர். இதற்கிடையே மூவர் கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த இடத்துக்கு சரவணக்குமார் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர். இதற்காக துணை குழு தலைவர், தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் விஜிபாபு, உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின், கேரள மாநில பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அணையின் மதகு பகுதி, பேபி அணை, சுரங்கப்பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டனர். சுரங்கப் பகுதியில் நீர்க்கசிவு அளவை ஆய்வு செய்தனர். அது இயல்பான அளவிலேயே இருந்தது. பின்னர் ஆய்வை முடித்துக் கொண்டு துணை குழுவினர் தேக்கடிக்கு திரும்பினர்.

அதன்பிறகு, குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. ஆய்வுக்கூட்டத்தில் வல்லக்கடவு பாதை சீரமைப்பு பணிகளுக்கு கேரள வனத்துறை ஒத்துழைப்பு அளிக்காதது குறித்து தமிழக பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அணையில் ஆய்வு செய்த போது மதகு பகுதிகளை இயக்கி பார்க்க வேண்டும் என்று கேரள பிரதிநிதிகள் கேட்டனர். அதன்படி, அணையில் உள்ள 1, 3, 4, 7 மற்றும் 9-வது மதகுகள் இயக்கி பார்க்கப்பட்டது. அவை நல்ல நிலையில் இயங்குகின்றன. ஆய்வின் போது அணையின் நீர்மட்டம் 114.95 அடியாக இருந்தது. அப்போது கசிவுநீர் அளவு நிமிடத்துக்கு 26 லிட்டர் என்ற அளவில் இருந்தது. இது நீர்மட்ட உயர்வுக்கு ஏற்ப இருப்பதால் அணை உறுதியாகவே உள்ளது. அணைக்கு செல்லும் வழியில் உள்ள வல்லக்கடவு ஆற்றுப்பாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த பலத்த மழையின் போது சேதம் அடைந்தது. தற்போது வரை அதை பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் சீரமைக்கவில்லை. எனவே, புலிகள் காப்பக அதிகாரிகள் மீது மூவர் கண்காணிப்பு குழுவிடம் புகார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோடை காலத்தில் அணையில் செய்யப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்து மூவர் குழுவிடம் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது’ என்றனர்.

Next Story