தேர்வுக்கு படிக்க சொல்லியதால் கிணற்றில் குதித்து மாணவன் தற்கொலை
பழனி அருகே தேர்வுக்கு படிக்க சொல்லியதால் கிணற்றில் குதித்து மாணவன் தற்கொலை செய்தார்.
பழனி,
பழனி அருகே உள்ள சின்னாரகவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் பென்னி. இவர், தனியார் பள்ளியில் அலுவலராக வேலை செய்து வருகிறார். அவருடைய மகன் ஸ்ரீரில் பென்னி (வயது 15). இவன், பழனியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பொதுத்தேர்வு நெருங்குவதால் விளையாட செல்லாமல் வீட்டில் இருந்து படிக்குமாறு ஸ்ரீரில் பென்னியை, அவருடைய தந்தை பென்னி கண்டித்தார். இதனால் கோபித்த ஸ்ரீரில் பென்னி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இரவு நீண்டநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் பென்னி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவனை தேடிவந்தனர். இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் தோட்டத்து கிணற்றுக்குள் ஸ்ரீரில் பென்னி பிணமாக கிடந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேர்வுக்கு படிக்க சொல்லியதால் மனம் உடைந்த ஸ்ரீரில் பென்னி கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story