பந்திப்பூர் வனப்பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதிகளில் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து கருகி உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறை ஊழியர்கள் 3 நாட்களாக போராடி அணைத்தனர்.
மசினகுடியில் ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில் கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தமிழக எல்லைக்குள் பரவியது. இதனால் முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட தெப்பக்காடு வனப்பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடி, கொடிகள் என அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. வனப்பகுதியில் இருந்து விலங்குகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை ஊழியர்கள் போராடி வரும் நிலையில் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள டிரைஜங்சன் என்ற பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பற்றி எரியும் இந்த தீயை 3 மாநில வனத்துறையினரும் இணைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே பந்திப்பூர் வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் 3-வது நாளாக ஈடுபட்டு உள்ளது.
முதுமலை, பந்திப்பூர் புலிகள் காப்பகங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் சிறிய வனஉயிரினங்கள் தீயில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Related Tags :
Next Story