தினமும் 1000 பேருக்கு நோட்டீசு: புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை காட்டி கிரண்பெடி அறிவுறுத்தல்


தினமும் 1000 பேருக்கு நோட்டீசு: புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை காட்டி கிரண்பெடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 26 Feb 2019 11:15 PM GMT (Updated: 26 Feb 2019 7:52 PM GMT)

புதுவையில் மோட்டார்சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை காரணம் காட்டி கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் 2 சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது தொடர்பாக கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. மக்களிடம் படிப்படியாக அறிவுறுத்தி ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கலாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ஆனால் கடந்த 11-ந்தேதியே கட்டாய ஹெல்மெட் திட்டம் அமலுக்கு வந்தது. கவர்னர் கிரண்பெடி உத்தரவின் பேரில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கட்டாய ஹெல்மெட் திட்டம் அமலுக்கு வந்தாலும் ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. எனினும் நாள்தோறும் போலீசார் போக்குவரத்து சிக்னல்களில் நின்று ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன எண்களை குறித்து வைத்து அவர்களுக்கு அபராதம் விதித்து நோட்டீசு அனுப்பி வருகின்றனர்.

இதுவரை சுமார் 30 ஆயிரம் வாகனங்களின் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குறித்த விவரங்களை எடுத்து நாளொன்றுக்கு சுமார் 1000 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஹெல்மெட் அணிய மக்கள் சுணக்கம்காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் சாலை பாதுகாப்பு குழு புதுவை தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், மோட்டார்சைக்கிள் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். டர்பன் அணிந்துள்ள சீக்கியர்களை தவிர யாருக்கும் அதில் விலக்கு கிடையாது. இதனால் புதுச்சேரியில் மோட்டார்சைக்கிள் ஓட்டுபவரும், பின்னால் அணிந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவதை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளது.

மேலும் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கேட்டுக்கொண்டபடி போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான ஒவ்வொரு காலாண்டு பதில்களையும் தவறாமல் அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளது.

இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவர்னர் கிரண்பெடி, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு புதுவை அரசுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறிவிட்டதால் அனைவரின் பாதுகாப்பினை கருதி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story