தஞ்சையில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரி தஞ்சையில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்கத்தின் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கோவிந்தராஜன், மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் விகிதாசார அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். சலவையாளர் சமூக மக்கள் தொகை அடிப்படையில் சட்டமன்றம், பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் ஆகிய சலவை துறைகளுக்கு முள்வேலி போடுவதுடன், மழைகாலங்களில் துணிகள் நனையாமல் இருக்க செட் அமைத்து கொடுக்க வேண்டும். தஞ்சை மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சலவைத்துறை கட்டி கொடுக்க வேண்டும். இலவச வீட்டுமனை வழங்கி, வீடு கட்டி கொடுக்க வேண்டும்.
குடிசைமாற்று வாரியம் மற்றும் வீட்டுவசதி வாரியம் மூலம் வீடு இல்லாத சலவை தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு காலதாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story