திருத்துறைப்பூண்டி பஸ்நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் வர்த்தகசங்கம்-நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடந்தது
திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வர்த்தக சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்திற்கு வந்துதான் செல்ல வேண்டும். மேலும் பஸ் நிலையம் அருகில் 5 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பஸ் நிலையத்தில் வந்துதான் பஸ் ஏறுகிறார்கள். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் பஸ் நிலைய வளாகத்திலேயே 2 டாஸ்மாக்கடைகள் உள்ளதால் குடிமகன்கள் மதுவை குடித்துவிட்டு பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அருகில் உள்ள வணிக நிறுவனங்களும் பாதிப்படைகிறது. இதனால் இந்த டாஸ்மாக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு குழு மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், மண்டல தலைவர் செந்தில்நாதன், நுகர்வோர் பாதுகாப்பு குழு நிறுவனர் பாசுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் அங்கை ராஜேந்திரன், ராமசாமி, பா.ஜனதா கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் சிவக்குமார், கார் ஓட்டுனர் உரிமையாளர் சங்க தலைவர் குமார், ஜவுளி கடை உரிமையாளர் சங்க தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக்கடையை உடனே அகற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story