அதிகாலை முதல் மது விற்பனை நடப்பதை கண்டித்து டாஸ்மாக் பார் முன்பு கத்தியுடன் இளம்பெண் மறியல் திருப்பூரில் பரபரப்பு சம்பவம்


அதிகாலை முதல் மது விற்பனை நடப்பதை கண்டித்து டாஸ்மாக் பார் முன்பு கத்தியுடன் இளம்பெண் மறியல் திருப்பூரில் பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 27 Feb 2019 11:30 PM GMT (Updated: 27 Feb 2019 7:54 PM GMT)

திருப்பூரில் அதிகாலை முதல் மது விற்பனை நடப்பதை கண்டித்து டாஸ்மாக் பார் முன்பு கத்தியுடன் இளம்பெண் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக அதிகாலை முதல் மது விற்பனை நடப்பதை கண்டித்து அண்ணா நகரை சேர்ந்த கவிதா(வயது 23) என்ற இளம்பெண் நேற்று காலை 7 மணி அளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பார் முன்பு கையில் கத்தியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாருக்குள் யாரும் மது குடிக்க செல்லக்கூடாது என்று கூறியபடி இருந்தார். பின்னர் அவர் பி.என்.ரோட்டில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து கவிதாவின் செயலை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் விரைந்து சென்று கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் கூறும்போது, மதுக்கடைகளை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பார்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எனது கணவர் காலையிலேயே மது அருந்தி விட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். எனது குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் எப்படி வாழ்க்கை நடத்துவது, உரிய நேரத்தில் மது பார்கள் செயல்படும் வகையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதால் கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். நண்பர் வாங்கிக்கொடுக்கிறார் என்று மது குடித்து விட்டு ஒவ்வொருவரும் வீட்டில் தொந்தரவு கொடுப்பதால் அவர்களுடைய குடும்பத்தினர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும். பலருடைய வாழ்க்கையை மது சீரழித்து வருகிறது. பார்களில் மது விற்பனையை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாருக்குள் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கிருந்து 2 பெட்டிகளில் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் பாருக்குள் மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் கவிதாவிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். இதனால் 1 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக இளம்பெண் கத்தியுடன் தர்ணா போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story