மணல் கடத்தல்காரர்களை ஆபாசமாக திட்டி மிரட்டும் பெண் இன்ஸ்பெக்டர்
மாமூல் வாங்கியதை உயர் அதிகாரியிடம் போட்டுக்கொடுத்ததால் மணல் கடத்தல்காரர்களை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது ‘வாட்ஸ்-அப்பில்’ வைரலாக பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பெண் ஒருவர் இருந்தார். இவர், இங்கு பணிபுரிந்த காலக்கட்டத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துகொண்டு, மணல் கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்கியதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வர, அவர்கள் பலமுறை பெண் இன்ஸ்பெக்டரை எச்சரித்துள்ளனர்.
இதனிடையே தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ஒரே மாவட்டத்தில் பல மாதங்களாக பணியாற்றி வந்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த பட்டியலில் வளவனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் இருந்தார். அதாவது, இவர் விழுப்புரம் சரகத்தில் இருந்து வேலூர் சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ‘வாட்ஸ்-அப்’ போன்ற சமூக வலைதளங்களில் அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், மணல் கடத்தல்காரர்களிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் வளவனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காலக்கட்டத்தில், மணல் கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, மணல் கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்கியதாக தெரிகிறது. இதுபற்றி கடத்தல்காரர்களில் சிலர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், மணல் கடத்தல்காரர்களை தனது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவர்களை மிரட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு நிமிடம், 3 மற்றும் 2 நிமிடங்கள் பேசும் ஆடியோ என்று மொத்தம் 3 ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் 3 பேரின் பெயரை குறிப்பிட்டு பேசும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், உங்கள் குடும்பம் விளங்காமல் போய்விடும், உங்கள் வேலையை நீங்கள் காட்டிவிட்டீர்கள், என் வேலையை நான் காட்டுகிறேன். காட்டும்போது பாருங்கள், என்கிட்டையே மோதிவிட்டீர்களா. உங்களை விடமாட்டேன் என்று பேசுகிறார். இதில் அவ்வப்போது ஆபாசமான வார்த்தைகளாலும் பேசுகிறார்.
இவர் பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, வேலூர் சரக போலீசார் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்காக வடக்கு மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story