மோசடி வழக்கில் முன்ஜாமீன் ரத்து, 5 ஆண்டுக்கு பிறகு சரண் அடைய முயன்ற பெண் அதிகாரி கைது
மோசடி வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை மறைத்து 5 ஆண்டுக்கு பிறகு சரண் அடைய முயன்ற பெண் அதிகாரியை கைது செய்து கோர்ட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை,
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக நசீம்பானு பணியாற்றி வந்தார். இவர், பேரூராட்சிக்கு வந்த வருமானத்தில் ரூ.2 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 768-ஐ மோசடி செய்தார்.
இந்த மோசடிக்கு அங்கு இளநிலை உதவியாளராக பணியாற்றிய ரமேஷ் மற்றும் ஜகாங்கீர், தேவராஜ், ராஜமாணிக்கம் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்தனர். இந்த மோசடி குறித்து அப்போதைய பேரூராட்சி உதவி இயக்குனர் திருஞானம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் நசீம்பானு உள்பட 7 பேர் மீது மோசடி, கூட்டுசதி உள்பட பல்வேறு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி நசீம்பானுவுக்கு வழங்கிய முன்ஜாமீனை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அத்துடன் அவரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் நசீம்பானு தலைமறைவாகவே இருந்தார்.
இந்த மோசடி வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, நசீம்பானுவின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட விவரத்தை கோவை கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்தபோதும் நசீம்பானு ஆஜராகவில்லை. எனவே அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகும் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேற்று நசீம்பானு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்து, தான் சரண் அடைவதாகவும், தனக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்டை தளர்த்தும்படியும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு என்.ஞானசம்பந்தம், மோசடி வழக்கில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஐகோர்ட்டில் முன்ஜாமீன் ரத்து ஆனதை மறைத்து, 5 ஆண்டுக்கு பிறகு சரண் அடைய முயற்சி செய்ததை கண்டுபிடித்தார்.
உடனே அவர் நசீம்பானு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவரை கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரைகைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story