நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் கனிமொழி எம்.பி. பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2019 3:15 AM IST (Updated: 28 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம், ஏ.வேலாயுதபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டம் பொதுமக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இதுபோன்ற ஊராட்சி சபை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு, மக்களின் அனைத்து குறைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் மிரட்டலுக்கு பயந்து, தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.வுக்கு காவடி தூக்கி வருகிறது. நீட் தேர்வு திணிப்பு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் போன்றவற்றில் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், மக்கள் விரோத போக்கை அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்து வருகிறது.

தமிழக அரசின் தவறான கொள்கைகளால், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. கிராமங்கள்தோறும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு எதிர்த்த பல திட்டங்களை தற்போது அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது.

ஜெயலலிதாவுக்கு கூட நேர்மையாக இல்லாத அ.தி.மு.க.வினர், மக்களுக்கு எப்படி நேர்மையாக இருப்பார்கள்?. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு பாடம் புகட்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ஒன்றிய செயலாளர்கள் காசிவிசுவநாதன், வசந்தம் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story