85 நாட்களுக்குப் பிறகு பாம்பன் பாலம் வழியாக ரெயில் சேவை தொடங்கியது - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


85 நாட்களுக்குப் பிறகு பாம்பன் பாலம் வழியாக ரெயில் சேவை தொடங்கியது - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Feb 2019 4:45 AM IST (Updated: 28 Feb 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

85 நாட்களுக்குப் பிறகு பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு நேற்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அவ்வப்போது இந்த பாலத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து ரெயில் சேவை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக ராமேசுவரத்துக்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது.

இதனிடையே தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியும், பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு அனைத்து பணிகளும் பிப்ரவரி முதல் வாரத்திலேயே நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து பயணிகள் இல்லாமல் வெறும் ரெயில் பெட்டிகள் மட்டும் பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரம் கொண்டு வரப்பட்டு சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பி மண்டபம் ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பாலத்தின் உறுதிச் சான்றிதழை பாதுகாப்பு ஆணையம் வழங்காமல் இருந்ததால் ராமேசுவரத்தில் இருந்து ரெயில் போக்குவரத்து தொடங்குவது காலதாமதமாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதி சான்றிதழ் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ராமேசுவரத்திற்கு ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் ஏற்கனவே ரெயில்கள் அனைத்தும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பாலத்தில் ரெயில்களை 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 85 நாட்களுக்கு பிறகு பாம்பன் பாலத்தின் வழியாக நேற்று ராமேசுவரத்துக்கு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இதில் முதல் ரெயிலாக உத்தரபிரதேசம் மண்வாடி பகுதியில் இருந்து புறப்பட்ட ரெயில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ராமேசுவரம் ரெயில் நிலையத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து வரிசையாக ரெயில்கள் இயக்கப்பட்டன.

காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து பயணிகள் ரெயில் ராமேசுவரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. ராமேசுவரம் வந்த ரெயில்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைவரும் மகிழ்ச்சியுடன் ராமேசுவரத்தில் வந்து இறங்கினர். இதுநாள் வரை வெறிச்சோடிக்கிடந்த ராமேசுவரம் ரெயில் நிலையம் நேற்று களைகட்டியிருந்தது.

ரெயில் பயணிகள் வரவேற்பு

மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயிலில் வந்த மதுரை வண்டியூரை சேர்ந்த தமிழ்செல்வி கூறுகையில், “ராமேசுவரத்துக்கு கடந்த 85 நாட்களாக ரெயில் போக்குவரத்து இல்லாதது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. தற்போது மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. கடல் மீது ரெயில் வரும் போது மனதுக்கு திரில் அனுபவமாக இருந்தது. ராமேசுவரத்துக்கு ரெயில்கள் நிறுத்தப்பட்டிருந்தபோது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஏனெனில் ரெயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் 3 மடங்கு அதிகமாக இருந்தது.” என்றார்.

கன்னியாகுமரியில் இருந்து வந்திருந்த தனுஷா குப்தே என்பவர் கூறும்போது, “மராட்டியத்தில் இருந்து நாங்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்றோம். அங்கிருந்து ராமேசுவரம் ராமநாத சுவாமியை தரிசிக்கவும், ராமசேது பாலத்தை பார்ப்பதற்காகவும் இங்கு ரெயிலில் வந்துள்ளோம். கடந்த சில மாதங்களாக ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை என்பது இங்கு வந்த பின்புதான் தெரிந்தது. நல்லவேளையாக நாங்கள் வரும்போது ராமேசுவரத்துக்கு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

ராமேசுவரத்தை சேர்ந்த நம்புராஜன் என்பவர் கூறும்போது, “கடந்த 85 நாட்கள் ரெயில் போக்குவரத்து இல்லாததால் ராமேசுவரம் ரெயில் நிலையமே வெறிச்சோடிகிடந்தது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மண்டபத்தில் இறங்கி அங்கிருந்து உடைமைகளுடன் பஸ்சில் ஏற்றிக் கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்தது. அதிக பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு ரெயில் பயணம் தான் வசதியாக இருக்கும். தற்போது ராமேசுவரத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும்“ என்று தெரிவித்தார்.


Next Story