எல்லையில் பதற்றம் எதிரொலி: மதுரை ரெயில்நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


எல்லையில் பதற்றம் எதிரொலி: மதுரை ரெயில்நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:37 AM IST (Updated: 28 Feb 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பதற்றம் எதிரொலியாக, மதுரை ரெயில்நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை,

காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில்நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை ரெயில்நிலையத்தில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் முகைதீன் தலைமையில் மதுரை, விருதுநகர், ராமேசுவரம், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, தென்காசி, கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரெயில்நிலையங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை ரெயில்நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பத்மாகர் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலைய பிளாட்பாரங்கள், ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர். அதேபோல, தமிழக ரெயில்வே போலீசார் தரப்பிலும், ரெயில் தண்டவாளங்கள், ரெயில்நிலைய வளாகம் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, சாதாரண உடையணிந்த போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உளவுத்துறை எச்சரிக்கையின்படி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மாவட்ட போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்ப நாய் பிரிவு போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வருகின்ற வாகனங்களும், பயணிகளும் பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.


Next Story