மாவட்டம் முழுவதும் 24 தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் 24 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ரோகிணி பிறப்பித்துள்ளார்.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் 24 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ரோகிணி பிறப்பித்துள்ளார்.
இதன் விவரம் வருமாறு:-
வாழப்பாடி தாசில்தார் வள்ளிதேவி, சேலம் மேற்கு தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த தீபசித்ரா, பசுமை வழிச்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் தெற்கு தாசில்தார் ஜாகீர் உசேன் இடமாற்றம் செய்யப்பட்டு வாழப்பாடி தாசில்தாராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நில எடுப்பு நேர்முக உதவியாளராக இருந்த ஆர்த்தி, இடமாற்றம் செய்யப்பட்டு தெற்கு தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர்.
சங்ககிரி தாசில்தார் ரவிச்சந்திரன், ஓமலூர்-மேட்டூர் அகல ரெயில் பாதை திட்ட (நில எடுப்பு) தனி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய தாசில்தார் அருள்குமார், சங்ககிரி தாசில்தாராகவும், சேலம் தனி தாசில்தார் (கனிமம்) பிரகாஷ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், விமான நிலைய விரிவாக்கம் தனி தாசில்தார் (நில எடுப்பு) பெரியசாமி, சேலம் தனி தாசில்தாராக (கனிமம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், எடப்பாடி தனி தாசில்தார் செல்வகுமார், சங்ககிரி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய நேர்முக உதவியாளர் முருகையன், ஆத்தூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய சிராஜூதீன், சேலம் விமான நிலைய விரிவாக்க தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேட்டூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுமதி, மேட்டூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், மேட்டூர் தனி தாசில்தார் ஹசீன்பானு, மேட்டூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜன், ஆத்தூர் முத்திரை கட்டண தனி தாசில்தாராகவும், ஆத்தூர் தனி தாசில்தார் சிவக்கொழுந்து, சேலம் சாலை மேம்பாட்டு திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், மேலும் சில தாசில்தார்களும் வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட 24 தாசில்தார்களும் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும், அவ்வாறு பணியில் சேர்ந்த விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story