மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டரின் நடவடிக்கையை கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 9 தாசில்தார்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து கலெக்டர் அன்புசெல்வன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
கடலூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் அவர்கள் பணியில் சேர்ந்து விட்டனர்.
இதேப்போல் கடலூர் மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் தாசில்தார்கள் ஹரிதாஸ்(சிதம்பரம்), தமிழ்செல்வன்(காட்டுமன்னார்கோவில்), ஹேமாஆனந்தி(புவனகிரி), புகழேந்தி(ஸ்ரீமுஷ்ணம்), சத்தியன்(கடலூர்), ஆறுமுகம் (பண்ருட்டி), விஜயா(குறிஞ்சிப்பாடி), கண்ணன்(திட்டக்குடி), கமலா(வேப்பூர்) ஆகிய 9 தாசில்தார்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து கலெக்டர் அன்பு செல்வன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாசில்தார்களை கடலூர் மாவட்டத்துக்குள்ளேயே இடமாறுதல் செய்யக்கோரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் அந்த சங்கத்தைச்சேர்ந்த அலுவலர்கள் அனைவரும் பணிக்கு வந்திருந்தபோதிலும் பணி செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில், ராஜேஷ் முன்னிலையில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இதுபற்றி மகேஷ் கூறுகையில், மாவட்ட மாறுதலை எதிர்த்து வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்றும்(வெள்ளிக்கிழமை) உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். பணியிடமாற்றம் செய்யப்பட்ட 9 தாசில்தார்களும் விழுப்புரம் மாவட்டத்துக்கு பணிக்கு செல்ல மாட்டார்கள் என்றார்.
இதே போல் பண்ருட்டியில் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா அலுவலகம் முன்பும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி மேற்கொள்ளப்பட்டுள்ள இடமாறுதலுக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருவது வருவாய்த்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story