நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் கனிமொழி எம்.பி. பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
ஏரல்,
ஏரல் அருகே உமரிக்காடு, வாழவல்லான், கொட்டாரக்குறிச்சி ஆகிய இடங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், தமிழகம் முழுவதும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். விரைவில் தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, பொதுமக்களின் அனைத்து குறைகளும் களையப்படும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவதாகவும், ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் கூறி, கடந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை.
மாறாக ஒரே நாள் இரவில் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி அடைந்தனர். சரக்கு, சேவை வரி விதிப்பால் சிறு குறு தொழில்கள் முடங்கின. தொழில் வளர்ச்சி குறைந்ததால், வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், மத்திய பா.ஜ.க. அரசு அனைத்தையும் காவி மயமாக்கி, மதவாதத்தை திணித்து வருகிறது. இனி ஒரு முறை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், பஞ்சாயத்து செயலாளர்கள் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story