இரட்டை இலை சின்னம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றாலும் தினகரனால் ஜெயிக்க முடியாது அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
இரட்டை இலை சின்னம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றாலும் தினகரனால் ஜெயிக்க முடியாது என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட மின்னவேட்டுவம்பாளையம் மற்றும் சாலையூரில் ரூ.2 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணி தொடக்க விழா மின்னவேட்டுவம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்து உள்ளது. இதனால் கடவுள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார். எனவே இரட்டை இலை சின்னம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் முறையீட்டுக்கு சென்றாலும் தினகரனால் ஜெயிக்க முடியாது. கோதாவரி– காவிரி ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கி உள்ளார். ஈரோடு– சத்தியமங்கலம், பவானி– தொப்பூர், பெருந்துறை– காங்கேயம், அறச்சலூர்– காங்கேயம் ஆகிய சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அதிகாரி பொன்னுசாமி, பேரூர் கழக செயலாளர் பாவணன், கூட்டுறவு சங்க தலைவர் மாரிமுத்து, சோமசுந்தரம், செந்தில், ஒன்றிய செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.