காரிப்பட்டி அருகே, நிலம் அளவீடு செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி


காரிப்பட்டி அருகே, நிலம் அளவீடு செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 1 March 2019 10:45 PM GMT (Updated: 1 March 2019 7:16 PM GMT)

காரிப்பட்டி அருகே, நிலம் அளவீடு செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வாழப்பாடி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). விவசாயி. இவருக்கு சொந்தமாக காரிப்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்குமாறு காரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நிவேத்குமார் (34) என்பவரிடம் வெங்கடேசன் கேட்டார். இதற்கு நிவேத்குமார் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி வெங்கடேசன் ரூ.7 ஆயிரத்தை நிவேத்குமாரிடம் கொண்டு கொடுத்தார்.

அதன்பின்னரும் நிலத்தை அளவீடு செய்து வரைபடம் கொடுக்காமல் நிவேத்குமார் காலம் தாழ்த்தி வந்தார். இதுபற்றி வெங்கடேசன், நிவேத்குமாரை சந்தித்து கேட்டார். அப்போது அவர் மேலும் ரூ.8 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார்.

இதுகுறித்து வெங்கடேசன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் நிவேத்குமாரை சந்தித்து ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் விரைந்து சென்று நிவேத்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

கைதான நிவேத்குமார் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். ஓமியோபதி மருத்துவ படிப்பு படித்துள்ளார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story