இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் போலீஸ் துணை சூப்பிரண்டு வலியுறுத்தல்
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வலியுறுத்தி உள்ளார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–
முதுகுளத்தூர் பகுதியில் ஏற்பட்ட விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 4 பேர் இறந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் மற்றும் ஆண்கள் 2 பேர் சென்றாலும் இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும் முதுகுளத்தூரில் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பழுதடைந்துள்ள சில கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். சாலையோர கடைகள் வாரச்சந்தை பகுதியில் அமைக்க பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதுகுளத்தூர் பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் எந்நேரமும் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். முதுகுளத்தூரில் போக்குவரத்து விதிகளை அனைவரும் முறையாக பின்பற்றி விபத்தில்லா பகுதியாக உருவாக்க வேண்டும். டேங்கர் லாரிகள், மினி வேன்கள் நகர் பகுதிக்குள் குறைவான வேகத்தில் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.