ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், கால்வாய்களை தூர்வார வேண்டும் தி.மு.க. விவசாய அணி கோரிக்கை


ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், கால்வாய்களை தூர்வார வேண்டும் தி.மு.க. விவசாய அணி கோரிக்கை
x
தினத்தந்தி 2 March 2019 3:45 AM IST (Updated: 2 March 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. விவசாய அணி கோரிக்கை விடுத்துள்ளது.

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சாயத்து யூனியன் கண்மாய்கள் 755, ஜமீன் கண்மாய்கள் 477, வைகை இணைப்பு கண்மாய்கள் 335, மணிமுத்தாறு இணைப்பு கண்மாய்கள் 27, 140 குண்டாறு இணைப்பு கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. இதனை அரசு தூர்வாரி விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்தை பெருக்க வழி ஏற்படுத்த வேண்டும். மேலும் பரளை கால்வாய், நாராயண காவேரி, சங்கரத்தேவன் கால்வாய், ஆப்பனூர் கால்வாய், கூத்தன் கால்வாய், களரி கால்வாய் போன்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

கடந்த 2017–18–ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான தேதியை கால நீட்டிப்பு செய்யவேண்டும். மாவட்டத்தில் ஆதி திராவிட காலனி வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும்.

நரிப்பையூர் கடல்நீர் நன்னீராக்கும் திட்டத்திற்கு பதிலாக மூக்கையூர், குதிரைமொழி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. எனவே கோடைகாலத்துக்கு முன்பாக குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தி.மு.க. மாவட்ட விவசாய அணி சார்பில் துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.


Next Story