ஒரு வருடத்தில் 6 வழக்குகள் மட்டுமே பதிவு: உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் செயல்பாடுகள் மந்தம் முறைகேடுகள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவதாக பொதுமக்கள் புகார்
புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் செயல்பாடு குறைவு காரணமாக கடந்த ஒரு வருடத்தில் 6 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் ரெட்டியார்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு என தனியாக ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் போலீசார் உள்ளனர்.
ரேஷன் கடைகளில் அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை கடத்துதல், பெட்ரோல் ‘பங்க்’ குகளில் தரம், அளவீடு குறித்து அதிரடி ஆய்வு மேற்கொள்ளுதல், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுவதை தடுத்தல், உணவு பொருட்களை பதுக்குதல் ஆகியவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து தடுத்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சமீபகாலமாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் பணி முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த துறையில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் பற்றிய தகவல் அறியும்(சி.சி.டி.என்.எஸ்.) வசதியில் இந்த துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் கிடைத்த தகவலின்படி கடந்த 2018–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் டிசம்பர் 31–ந் தேதி வரை வெறும் 6 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
புதுவையில் தெருவோர ஓட்டல்களில் பெரும்பாலும் வணிக உபயோக கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தாமல், முறைகேடாக மானிய உதவியுடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் பெட்ரோல் ‘பங்க்’குகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவீடு மற்றும் கலப்படமின்றி தரமாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதையும் அதிகாரிகள் கவனிப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார்கூறி வருகிறார்கள்.
எனவே இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. அதுபோன்ற முறைகேடுகள் இந்த போலீசாரால் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘எங்களிடம் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது’ மேலும் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் யார் மீதாவது உரிய நடவடிக்கை எடுக்க முயன்றால் உடனடியாக அவர்கள் தங்களுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் போனிலோ, அல்லது அவர்களை நேரிலோ அழைத்து எங்களை பணி செய்யவிடாமல் மிரட்டும் வகையில் செயல்படுகிறார்கள் என வேதனையோடு கூறினார்.