தூத்துக்குடி மாவட்டத்தில் 21,743 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. இதில் 21 ஆயிரத்து 743 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
தூத்துக்குடி,
தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 9 ஆயிரத்து 845 மாணவர்கள், 11 ஆயிரத்து 898 மாணவிகள் என மொத்தம் 191 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 743 பேர் எழுதினர்.
இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான வினாத்தாள்கள் 11 வினாத்தாள் கட்டு காப்பகத்தில் இருந்து 44 காப்பாளர்கள் மூலம் அந்தந்த தேர்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இதில் 35 தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 276 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5 ஆயிரத்து 942 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். கோவில்பட்டி ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் தேர்வு எழுத விண்ணப்பித்த 17 பேரில் 13 பேர் தேர்வு எழுதினர். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையிலான 33 பறக்கும் படை குழுவினர், தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பிளஸ்-2 தேர்வுகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்க உள்ளது.
இதேபோன்று பிளஸ்-1 தேர்வுகள் வருகிற 6-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி முடிவடைகிறது. பிளஸ்-1 தேர்வை மாவட்டம் முழுவதும் 8 ஆயிரத்து 853 மாணவர்கள், 10 ஆயிரத்து 901 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 754 பேர் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
Related Tags :
Next Story