அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் வரவேற்போம் சேலத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
‘அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் வரவேற்போம்’ என சேலத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ஓமலூர்,
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு வந்தார். சேலம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கான பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தின் உரிமைக்காக வெளியில் இருந்து குரல் கொடுத்தோம். இனி கூட்டணியில் இருந்து அழுத்தம் கொடுப்போம். மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் பிரச்சினைகளை நிச்சயமாக தீர்ப்போம். இதற்காகவே இந்த கூட்டணி வைத்துள்ளோம்.
பா.ம.க., தி.மு.க.வுடன் சேரவில்லை என்ற வயிற்றெரிச்சலில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை தி.மு.க.வினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அவதூறுகளை பற்றி நாங்கள் கண்டு கொள்வதில்லை. எங்களுடைய நோக்கம் தமிழகத்தின் மொழி, இனம், பண்பாடு, பெண்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதுதான். மண்ணின் பிரச்சினை மக்களின் பிரச்சினை.
தொகுதி அறிவித்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பிறகு முடிவு செய்யப்படும். மேலும் சில புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் வரவேற்போம். இது குறித்து அ.தி.மு.க. அறிவிக்கும்.
எங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி அமைத்து உள்ளோம். 40 தொகுதிகளிலும் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் உற்சாகமாக உள்ளனர். தொடர்ந்து பிரதமர் தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்வோம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Related Tags :
Next Story