செய்யாறில் நகை, அடகுக்கடையில் வருமானவரித்துறை சோதனை ஒரே நேரத்தில் 4 இடங்களில் நடந்தது
செய்யாறில் நகை மற்றும் அடகுக்கடை உள்பட 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் காந்திசாலையில் நகைக்கடை ஒன்று இயங்கிவருகிறது. இதன் எதிரில் அடகுக்கடையும் உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த வருமாவரித்துறை அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று பகல் 12 மணிக்கு செய்யாறு காந்திசாலைக்கு வந்தனர்.
அவர்கள் 1.30 மணிக்கு தனித்தனி குழுக்களாக பிரிந்து நகை கடை, அடகுக்கடை மற்றும் கடை உரிமையாளர்களின் வீடுகள் என 4 இடங்களுக்கும் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகைக்கடை மற்றும் அடகுக்கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
நகைக்கடையில் தினமும் நடைபெறும் நகைவிற்பனை, வங்கி பணபரிவர்த்தனை குறித்தும், அடகுக்கடையில் தினமும் நடைபெறும் பணபரிவர்த்தனை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று அவர்களுடைய வீடுகளிலும் அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர்.
நகைக்கடை மற்றும் அடகுக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் தகவல் அந்தப்பகுதியில் உள்ள மற்ற நகைக்கடைகளுக்கும் பரவியது. இதனால் வழக்கமாக இரவு 9 மணிக்குமேல் கடைகளை பூட்டும் நகைக்கடை உரிமையாளர்கள் வழக்கத்துக்கு மாறாக நேற்று 7 மணிக்கே கடைகளை பூட்டிவிட்டு சென்றனர்.
தொடர்ந்து நள்ளிரவு வரை இந்த சோதனை நடைபெற்றது. இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரி சுப்பிரமணியனிடம் கேட்டபோது தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது என்று கூறினார். வருமானவரித்துறை சோதனை காரணமாக செய்யாறு காந்திசாலையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story