பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டரில் 4.3 ஆக பதிவானது
பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
வசாய்,
பால்கர் மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து நிலநடுக்கம் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலநடுக்கம் பால்கர் பகுதிகளில் விட்டு,விட்டு உணரப்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3-ல் இருந்து 4.1 வரை பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் பூகம்பம் ஏற்பட்டு விடுமோ என்ற பீதியுடன் நாட்களை கழித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 1-ந்தேதி ஒரே நாளில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. சுவர்களில் பெரியளவில் விரிசல் உண்டானது.
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் என அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கத்தின் போது வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த போது அப்பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்று சுவரில் மோதி உயிரிழந்தது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். மாவட்ட நிர்வாகம் மக்களை முகாம்களில் தங்க வைத்தது.
அரசு நிர்வாகம், இதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்தநிலையில், நேற்று காலை 11.14 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஏற்கனவே பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்ட தகானு தாலுகாவில் உள்ள துண்டல்வாடி கிராமத்தில் தான் மீண்டும் இந்த நிலநடுக்கம் உண்டானது.
அப்போது, கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.
இதுவரை பால்கரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ரிக்டர் அளவுகோலில் பதிவான அதிபட்ச அளவு இது தான். நிலநடுக்கத்தின் அளவு அதிகரித்து இருப்பது பால்கர் மக்களை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது.
Related Tags :
Next Story