5 நிமிடம் கூட மோடியால் காங்கிரசை குறை கூறாமல் இருக்க முடியாது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மோடியால் எங்களை 5 நிமிடம் கூட குறை கூறாமல் இருக்க முடியாது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
துலே,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மராட்டிய மாநிலம் துலே மற்றும் மும்பையில் பிரசாரம் செய்தார். துலேயில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
காஷ்மீரில் புலவாமா தாக்குதல் நடந்தவுடன் நான் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் யாரும் அரசை குறைகூறவேண்டாம் என உறுதிபட கூறினேன். மேலும் நாடு ஒற்றுமையுடன் நின்று செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஆனால் பிரதமர் மோடி புலவாமா தாக்குதலுக்கு பின் கொடுத்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசுகிறார். அவரால் 5 நிமிடம் கூட எங்களை குறைகூறாமல் இருக்க முடியாது. இதுதான் காங்கிரசுக்கும், அவருக்கும் உள்ள வேறுபாடு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்திற்கு எதிரான போர் என நம்பப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தான் வங்கிகளின் வாசலில் காத்துக்கிடந்தனர்.
அனில் அம்பானியோ, நிரவ் மோடியோ, மெகுல் சோக்சியோ வங்கி வாசலில் தவம் கிடக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாத வருவாய் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
20 முதல் 25 பேரை தொழிலதிபர்களாகவும், மற்றவர்களை ஏழையாகவும், விவசாயிகளாகவும், வேலைவாய்ப்பு இல்லாதவர்களாகவும் வைத்திருக்க பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது.
மக்கள் அனைவருக்கும் சமமாக இடம்கொடுக்கும் அரசு தேவை. இந்த நாடு அன்பாலானது. ஆனால் பா.ஜனதா செல்லும் இடங்களில் எல்லாம் வெறுப்பை பரப்புகிறது. அதேநேரத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் அன்பை விதைக்கிறோம்.
மோடி எப்போதும் பொய்களையே பேசி வருகிறார். நீங்கள் உண்மைகளை கேட்க விரும்பினால் இங்கு வரவேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்
Related Tags :
Next Story