மும்பையில் மேலும் 2 மெட்ரோ ரெயில் திட்டங்கள் : முதல்-மந்திரி ஒப்புதல்
மும்பையில் மேலும் 2 மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் அளித்து உள்ளார்.
மும்பை,
மும்பையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மெட்ரோ மற்றும் மோனோ ரெயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மும்பையில் ஏற்கனவே 12 மெட்ரோ ரெயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில், காட்கோபர்- வெர்சோவா இடையே மட்டும் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
கொலபா-பாந்திரா-சீப்ஸ், வடலா-காசர்வடவலி, தகிசர்- டி.என். நகர், அந்தேரி கிழக்கு- தகிசர் கிழக்கு உள்ளிட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில், மும்பையில் மேலும் 2 மெட்ரோ ரெயில் திட்டங்களை எம்.எம்.ஆர்.டி.ஏ. செயல்படுத்துகிறது. இதன்படி மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவிமும்பை விமான நிலையத்தை இணைக்கும் வகையிலும், மும்பை காஞ்சூர்மார்க்- தானே மாவட்டம் பத்லாப்பூரை இணைக்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதில், மும்பை சர்வதேச விமான நிலையம்- நவிமும்பை விமான நிலையம் இடையே 33.15 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சூர்மார்க்- பத்லாப்பூர் இடையே 45 கி.மீ. தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இவ்விரு மெட்ரோ ரெயில் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய எம்.எம்.ஆர்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது. அதன்பின்னர் அந்த திட்ட அறிக்கை மந்திரி சபை ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.
மந்திரி சபை ஒப்புதலுக்கு பின் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story