மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்


மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்தனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணிக்குளம் மேல்கரையில் உள்ள ஒரு வீட்டின் ஓரத்தில் தகர ஷெட் அமைப்பதற்காக நேற்று வெல்டிங் வேலை நடைபெற்றுள்ளது. இதில் தொழிலாளர்கள் வாழச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (வயது 29), குணசேகரன் மகன் ஆனந்த் (20), கிளியூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் வீரமணி (28) ஆகிய 3 பேரும் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வெல்டிங் வைப்பதற்காக ஒரு இரும்பு பைப்பை ராஜ்குமார், ஆனந்த் ஆகியோர் நிமிர்த்தியபோது எதிர்பாராதவிதமாக இரும்பு பைப் மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியின் மீது பட்டு உள்ளது. இதனால் ராஜ்குமார், ஆனந்த் ஆகிய 2 பேரையும் மின்சாரம் தாக்கியது.

இதனை கண்ட அருகில் நின்ற வீரமணி ஓடிச்சென்று அவர்களை காப்பாற்றுவதற்காக இருவரையும் பிடித்துள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் ராஜ்குமார், ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வீரமணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமார், ஆனந்த் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வீரமணி மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story