நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு யாருக்கு? பி.ஆர்.பாண்டியன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு யாருக்கு? பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு யாருக்கு? என்று பி.ஆர்.பாண்டியன் பேட்டி அளித்தார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சினைகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் விவசாயிகள் சந்திப்பு மற்றும் தமிழகம் தழுவிய பரப்புரை பயணத்தை அதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் உள்ள பென்னிகுயிக் மண்டபத்தில் இருந்து தொடங்கினார்.

இந்த பிரசார பயணம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று குமரி மாவட்டம் வந்தது. அங்கு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் தேர்தல் அறிக்கை குறித்து தமிழகம் தழுவிய பரப்புரை பயணத்தை தேனி மாவட்டத்தில் இருந்து தொடங்கியிருக்கிறேன். விவசாயிகளுக்கு இளைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லும் விதமாக நடத்தப்படும் இந்த பிரசார பயணம் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றபிறகு இறுதியாக வருகிற 8-ந் தேதி தஞ்சையில் நிறைவு பெறும். அங்கு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு யாருக்கு என்பது பற்றி ஆலோசித்து முடிவை அறிவிப்போம்.

தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. மத்திய அரசின் விவசாயிகளுக்கு நிவாரணநிதி வழங்கும் திட்டம் ஏமாற்றுத் திட்டமாகும். பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும். இந்த அணையை கட்டிய அலெக்சாண்டர் மிஞ்சின் என்ற மூக்கன்துரைக்கு நினைவு மணிமண்டபம் உடனடியாக தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story