முகிலனை மீட்கக்கோரி அரசியல் கட்சியினர் ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
முகிலனை மீட்கக்கோரி அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் மாயமானார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசி வந்த அவரை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் சார்பில் முகிலன் மீட்பு கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் சார்பில் முகிலனை மீட்கக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து கூட்டு இயக்கத்தினர் ஈரோடு பெரியார் மன்றத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள்.
கூட்டத்துக்கு கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உள்பட ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பிறகு பெரியார் மன்றத்தில் இருந்து முகிலன் மீட்பு கூட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் திடீரென போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து கூட்டு இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தனபாண்டியனை சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கூட்டு இயக்கத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.