வேதாரண்யத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்


வேதாரண்யத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அர்ச்சர கட்டளை பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது58). இவர் கூரை வீடு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து அவர் குடும்பத்தினரை அழைத்து கொண்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீ மளமளவென அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவினர்கள் சித்திரவேலு (35), கண்ணன் (35) ஆகியோருடைய கூரை வீடுகளுக்கும் பரவியது.

ஒரே நேரத்தில் அருகருகே இருந்த 3 கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேதாரண்யம் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாலுசாமி, சித்திரவேலு, கண்ணன் ஆகியோருடைய 3 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

வீடுகளில் இருந்த 25 பவுன் நகைகள், பணம், டி.வி., மிக்சி, கிரைண்டர், பீரோ உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story