மகாமக குளத்தில் தண்ணீர் தேக்க ரூ.19¾ லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்


மகாமக குளத்தில் தண்ணீர் தேக்க ரூ.19¾ லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

மகாமக குளத்தில் தண்ணீர் தேக்க வசதியாக ரூ.19¾ லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் பயன்பாட்டை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற மகாமக குளம் உள்ளது. கோடை காலத்தில் மகாமக குளம் வறண்டு போவதால் ஆன்மிக சுற்றுலா வரும் பயணிகள் குளத்தில் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டது. மகாமக குளத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் மூலமாக மகாமக குளத்துக்கு தேவையான தண்ணீரை தரும் அரசலாற்றின் இடது கரையில் 2 இடங்களில் 300 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.

இதில் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து மகாமக குளத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மோட்டார் ஒரு மணி நேரத்தில் 1 லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டதாகும்.

ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் அதன் பயன்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கும்பகோணம் அரசலாற்றங்கரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பாரதிமோகன் எம்.பி. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு மின் மோட்டாரின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மகாமக குளத்துக்கு வந்த தண்ணீரை மலர்தூவி வரவேற்றார். நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி, தஞ்சை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆசைதம்பி, கும்பகோணம் காவிரி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர்கள் முத்துமணி, பார்த்தசாரதி, தொழில் அதிபர் ராயா.கோவிந்தராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story