மீன்சுருட்டி அருகே நாட்டு வெடி தயாரித்த 3 பேர் கைது


மீன்சுருட்டி அருகே நாட்டு வெடி தயாரித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே நாட்டு வெடி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீன்சுருட்டி,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குறுங்குடி புளியடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ணன்(வயது 37). இவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவ நல்லூர் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கஞ்சங் கொள்ளை கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழில் உரிமம் பெற்று முறையாக தொழில் செய்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு உரிமம் காலாவதியானது. இதையடுத்து உரிமத்தை புதுப்பிப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ளார். சில காரணங்களால் அந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரி ரத்து செய்து ஆணை பிறப்பித்தனர். அதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெடி பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வரும் தனது சகோதரர்கள் ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரிடம் இருந்து வெடி மருந்துகளை மணிகண்ணன் அரியலூர் மாவட்டம் வானவ நல்லூர் கிராமத்திற்கு வாங்கி வந்து நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உரிய அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மணிகண்ணன் மற்றும் பணியாளர்கள் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் காலனி தெருவை சேர்ந்த மற்றொரு மணிகண்டன்(22), மோகனசுந்தரம்(23) ஆகியோரை கைது செய்து அங்கிருந்த வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்

பின்னர் அரியலூர் வெடி மருந்து கண்டுபிடித்தல் மற்றும் அழித்தல் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் தலைமையிலான குழு நேரில் வந்து வெடி பொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story