வெயிலை சமாளிக்க பெரம்பலூர் போலீசாருக்கு பழச்சாறு போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் வழங்கினார்


வெயிலை சமாளிக்க பெரம்பலூர் போலீசாருக்கு பழச்சாறு போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் வழங்கினார்
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

வெயிலை சமாளிக்கவும், அதனால் ஏற்படும் தாகத்தை தீர்க்கவும் பழச்சாறினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப் பதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டதே என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணியை போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் நகர் பகுதிகளில் பகல் நேரத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் பணியில் பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீசாரும், ரோந்து பணிக்கு செல்லும் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வெயிலை சமாளிக்கவும், அதனால் ஏற்படும் தாகத்தை தீர்க்கவும் பழச்சாறினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தினார். இதே போல் கோடை காலம் முடியும் வரை தினமும் போலீசாருக்கு மோர் அல்லது எலுமிச்சை பழச்சாறு வழங்கப்படும் என்று திஷாமித்தல் தெரிவித்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கும் பழச்சாற்றினை போலீஸ் சூப்பிரண்டு வழங்கி, பாராட்டினார். அவர்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் மற்றும் போக்கு வரத்து போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story