பால்குடம் செல்லும் வீதியை சீரமைக்கக்கோரி தரையில் படுத்து உருளும் போராட்டம்


பால்குடம் செல்லும் வீதியை சீரமைக்கக்கோரி தரையில் படுத்து உருளும் போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் பால்குடம் எடுத்து செல்லும் வீதியை உடனடியாக சீரமைக்கக் கோரி தரையில் படுத்து உருளும் போராட்டம் நடைபெற்றது.

காரைக்குடி,

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இநத் கோவிலில் நடைபெறும் மாசி–பங்குனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இதையடுத்து இந்த திருவிழா வருகிற 12–ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையடுத்து வருகிற 20–ந் தேதி பால்குட திருவிழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம், காவடி, கரகம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் எடுத்து ஊர்வலமாக வருவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்த பகுதி மக்களும் அன்றைய தினம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்றைய தினம் காலை காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுத்து அம்மன் சன்னதி, கல்லுக்கட்டி, முத்தூரணி, முத்துப்பட்டணம் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைவார்கள். இந்தநிலையில் காரைக்குடி பகுதி முழுவதும் தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி சில இடங்களில் முடிவடைந்துள்ளன.

ஆனால் தற்போது பால்குடம் எடுத்தும் வரும் வீதியான முத்துப் பட்டணம் பகுதியில் உள்ள சாலைகளில் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. பல ஆண்டுகாலமாக இந்த வழியாக பால்குடம் எடுத்து செல்லும் பக்தர்கள் இந்தாண்டு இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

பால்குட விழாவிற்கு முன்னதாக இந்த சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தரையில் படுத்து உருளும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கீழ ஊரணி, செஞ்சை, கல்லுப்பட்டி, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த செயலாளர்கள் அய்யப்பன், கோவிந்தன், ரவி, கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சாத்தையா, நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவர் மன்ற செயலாளர் ராஜா, இளைஞர் பெருமன்ற செயலாளர் சிவாஜி காந்தி உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story