ஏ.டி.எம். மையங்களில் தொடரும் மோசடி பணத்தை பறிகொடுக்கும் கிராம மக்கள்


ஏ.டி.எம். மையங்களில் தொடரும் மோசடி பணத்தை பறிகொடுக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை நகர்ப்பகுதியில் ஏ.டி.எம். மையங்களை சுற்றி வரும் மோசடி கும்பல்களிடம் கிராம மக்கள் உள்பட பலரும் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர்.

மானாமதுரை,

மனாமதுரையைச் சுற்றிலும் 39 ஊராட்சிகளைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்புற மக்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என பலரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கி பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். மேலும் முதியோர்கள் பலரின் வாரிசுகள் வெளியூர்களில் வசிப்பதால் பெற்றோர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் அனுப்புகின்றனர். மானாமதுரை நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உள்ளன.

இந்த மையங்களை குறிவைத்து மோசடி கும்பல் டிப்–டாப்பாக உடையணிந்து வலம் வருகின்றனர். அவர்கள் பணம் எடுப்பது போல பாசாங்கு காட்டி, கிராம மக்கள், முதியோர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். முதியோர்கள் பலரும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வருகின்றனர். இது இவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. ஏ.டி.எம்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பேச்சுகொடுத்து பணம் எடுத்து கொடுப்பது போல ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து விடுகின்றனர். பின் முதியோர்களின் கார்டுகளை வைத்து தொடர்ச்சியாக பணத்தை எடுத்து விடுகின்றனர்.

நீண்ட நாள் கழித்து பணம் எடுக்க வரும் போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதை போலீசிடம் புகார் செய்ய தயங்கியும் வருகின்றனர். இதுபோன்று கிராம மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களுடைய ஏ.டி.எம். கார்டுகளில் இருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது. சமீபத்தில் குறிப்பிட்ட பெரும் தொகையை ஏமாந்த நபர் மாவட்ட சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் குற்றப்பிரிவு போலீசார் அந்த வழக்கை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இதே போல் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க தெரியமால் அங்கு நின்றிருந்தவரிடம் கொடுத்து உள்ளார். அந்த நபர் உதவி செய்வது போல நடித்து, கிராமத்துக்காரரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து, பணம் மோசடி செய்துள்ளார். இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவதால், மானாமதுரையில் வலம் வரும் ஏ.டி.எம். மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சில தேசியமயமாக்கப்பட்ட வாங்கிகளில் ஊதிய பிரச்சினையால் காவலாளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story