கோத்தகிரி, மஞ்சூரில் பலத்த மழை: காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
கோத்தகிரி, மஞ்சூரில் பலத்த மழை பெய்தது. காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி நிலவி வந்தது. மேலும் இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் அடித்தது. இருப்பினும் விவசாயிகள் மலைக்காய்கறிகளை பயிரிட்டு, கோடை மழைக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை 6 மணி வரை நீடித்தது. மழை காரணமாக சில இடங்களில் வீடுகளின் சுவர் இடிந்து, சேதமடைந்தது. மேலும் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது.
கேர்க்கம்பை, வ.உ.சி. நகர், காவிலோரை, ஓடேன்துறை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் விவசாய நிலங்களை ஒட்டியவாறு செல்லும் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
மேற்கண்ட இடங்களில் ஆகாய தாமரை அதிகளவில் ஓடையில் படர்ந்து இருந்ததால், நீரோட்டம் தடைபட்டு மழைநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததுள்ளது. இதன் காரணமாக 20 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயசுதா, பிரபாகரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.
மேலும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காவிலோரை, வ.உ.சி. நகர், ஓடேன்துறை உள்ளிட்ட இடங்களில் ஓடையில் ஆக்கிரமித்து இருந்த ஆகாய தாமரை செடிகளை அகற்றி நீரோட்டத்துக்கு வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் கோத்தகிரி நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை நிரம்பி வழிந்தது.
இதேபோன்று மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்குந்தா, மேல்குந்தா, கிண்ணக்கொரை, பிக்கட்டி, குந்தா, எடக்காடு, காந்திகண்டி, கெத்தை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையில் மேல்குந்தா கூர்மையாபுரம் பகுதியில் மின் கம்பத்தின் மீது மின்னல் தாக்கியது. இதனால் மின்கம்பி அறுந்து விழுந்தது. மேலும் மின்வினியோகம் பாதிக்கப் பட்டது.
இதையடுத்து மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story